வியாழன், அக்டோபர் 03, 2013

ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை


ராஞ்சி, பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்–மந்திரியாக இருந்தபோது ரூ.950 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. 53 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலுபிரசாத் மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 17 ஆண்டுகளாக இந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 30–ந்தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. முன்னாள் முதல்–மந்திரிகள் லாலுபிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா, ஜெகதீஸ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து லாலுபிரசாத்தும் மற்றவர்களும் ராஞ்சி அருகில் உள்ள விர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 42 பேருக்கும் எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு 3–ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி காணொளி காட்சி எனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தீர்ப்பு வெளியிடப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை வக்கீல்கள் வாதம் நடந்தது. முதலில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி கூறியதாவது:–

குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊழல் மற்ற ஊழல்களுக்கு சிகரமாக உள்ளது. இதில் பல வி.ஐ.பி.க்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே லாலு பிரசாத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கோரினார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி பி.கே.சிங் தீர்ப்பை வெளியிட்டார்.

லாலு மீது ஊழல், கிரிமினல் சதி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அவரது எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக