திங்கள், அக்டோபர் 21, 2013

திரைப்படமானது சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கை!

2010-ஆம் ஆண்டு ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் ‘ஷாஹித்’ தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தனக்கு சரியென தோன்றியதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக ஷாஹித் தனது உயிரையே பலி கொடுக்க நேர்ந்தது. கலப்படம் ஏதுமில்லாமல் ஹன்ஸல் மேத்தா ஷாஹிதின் கதையை கூறுகிறார்.


மேத்தாவின் உன்னதமான இயக்கமும், ஷாஹிதின் வேடத்தில் நடித்துள்ள ராஜ்குமார் யாதவின் நடிப்பும் ரசிகர்களை இருக்கைகளில் இருத்தும்.

வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி
“அகர் இஸ்கா நாம் டொனால்டு யா சுரேஷ் ஹோத்தா, தோ க்யா யெ யஹாம் கடா ஹோத்தா” (இவருடைய பெயர் டொனால்டு அல்லது சுரேஷாக இருந்தால் இவர் இங்கே நிற்க வேண்டிய சூழல் ஏற்படுமா?) – மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னால் ஷாஹித் எழுப்பும் மில்லியன் டாலர் கேள்வி இது. இந்தக் கேள்வி மாற்றத்திற்கான ஒலியை எழுப்புகிறது.

எந்தவொரு ஆதாரமுமில்லாமல் பெயர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நபரை சுட்டிக்காட்டி ஷாஹித் இந்தக் கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வி இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் கொடுமைகளை அனுபவிக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்காக ஷாஹித் எழுப்பும் கேள்வியாக அமைகிறது.

தாடியும், தொப்பியும் அணிந்த வில்லன்கள் வழக்கமான ஹிந்தி திரைப்படத்தில் வருவார்கள். ஆனால் ஷாஹித் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அபூர்வமானவை என்று ரசிகர்கள் கருதுகின்றார்கள்.

ஷாஹிதும் தீவிரவாதக் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட நபராவார். செய்யாத குற்றத்தின் பெயரால் சிறையில் நிர்வாணமாக சித்தரவதை செய்யப்பட்டார். இது ஷாஹிதின் கடந்த கால வரலாறு.

ஆனால், சித்திரவதையைத் தாங்கிக் கொண்ட ஷாஹித், சமூகத்தில் இருந்து ஓடி ஒளிந்து விடவில்லை. தன்னைப் போல பொய் வழக்குகளில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான நிரபராதிகளுக்காக களமிறங்குகிறார். சட்ட ரீதியான போராட்டத்தின் மூலம் ஏராளமானோருக்கு விடுதலை வாங்கித் தருகிறார். விடுவார்களா பாசிஸ்டுகள்?

இதில் மிரண்டு போன கயவர்கள் 2010-ஆம் ஆண்டு ஷாஹிதை சுட்டுக் கொலை செய்தார்கள். ஷாஹிதின் சகோதரனுடைய வேடத்தில் ஸீஷான் அய்யூபும், நாயகியாக ப்ரஸ்லின் ஸந்துவும், அரசு தரப்பு வழக்குரைஞராக ஷாலினி வாஸ்தவாவும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒன்பது மாதங்களில் குறைந்த செலவில் பூர்த்தியான இத்திரைப்படம் 2012-ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக