சென்னை/மதுரை: தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும், பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும், கருப்புச் சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் கடந்த 06.10.2013 ஞாயிறு அன்று நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முஹம்மது ரஸீன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு. வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் ஃபாரூக், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மதுரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். ரஃபீக் அஹமது, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீஃப், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ, நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கனி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
2. தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
3. நடைபெற்ற அனைத்து குற்றங்களையும், முஸ்லிம்கள்தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல், நடுநிலையான, நேர்மையான மனநிலையோடு காவல்துறையும், உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.
4. கருப்புச் சட்டமான யு.ஏ.பி.ஏ. சட்டம் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
5. ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.
6. வட மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர், உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும், காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக