தமிழகத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பதவியேற்றது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் முதல்வர் நடத்த உள்ளார். இதுதவிர, பட்ஜெட் தயாரிப்பு பணியும் துவங்கியுள்ளது.இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே, அமைச்சரவையில் மற்றொரு இஸ்லாமியருக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. இதன்படியே, புதிய அமைச்சராக, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, முகமது ஜானை அமைச்சராக நியமித்து, கவர்னர் பர்னாலா நேற்று உத்தரவிட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்க உள்ளது.
புதிய அமைச்சர் நியமனத்துடன், ஆறு அமைச்சர்களது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக பொறுப்பேற்கும் முகமது ஜான் வசம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இலாகாவை கவனித்து வந்த சின்னையா, இனி சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக செயல்படுவார்.அமைச்சர் சண்முகவேலுவிடம் இருந்து தொழில் துறை பறிக்கப்பட்டு, சிறு தொழில் உட்பட ஊரக தொழில் துறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை வழங்கப்பட்டுள்ளது.சண்முகவேலு வசம் இருந்த தொழில், இரும்பு கட்டுப்பாடு, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கத் துறையை வைத்திருந்த எஸ்.பி.வேலுமணி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கருப்பசாமி வசம் இருந்த கால்நடைத் துறை, அமைச்சர் சிவபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சிவபதி வசம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கருப்பசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தன.
dinamalar.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக