4 Jun 2011 ஹேக்:போஸ்னியாவில் அப்பாவி முஸ்லிகளை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் போஸ்னியன் செர்ப் ராணுவ தலைவன் ராத்கோ மிளாடிச் நேற்று ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
தான் ஒரு நோயாளி எனக்கூறிய மிளாடிச், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு நீதிபதி அல்போன்ஸ் ஓரியிடம் கோரிக்கை விடுத்தான். ’எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசிக்க தேவையில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக புகார் அளிக்கும் எண்ணமும் இல்லை. நான் எனது மக்கள் மற்றும் நாட்டை பாதுகாத்துள்ளேன்’ என மிளாடிச் தெரிவித்தான்.
1995-ஆம் ஆண்டு போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகாவில் 8 ஆயிரம் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்வதற்கு தலைமை வகித்தவன் தாம் 69 வயதான மிளாடிச். 1992 ஆம் ஆண்டு முதல் 1995-ஆம் ஆண்டுவரை சரஜோவில் நடந்த கூட்டுப் படுகொலையில் 12 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மிளாடிச்சிற்கு பங்குண்டு என குற்றச்சாட்டு உள்ளது.
ஜூலை 4-ஆம் தேதி மிளாடிச் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான். அப்பொழுது தனக்கெதிரான 11 குற்றச்சாட்டுகளுக்கு மிளாடிச் பதில் கூற வேண்டும். இல்லையெனில் குற்றக்காரன் அல்ல என வாதிடும் மனு மிளாடிச்சிற்கு நடைமுறையின் படி அளிக்கப்படும்.
கடந்த 16 வருடங்களாக தலைமறைவாக வசித்துவந்த மிளாடிச் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி செர்பியாவில் ஒரு கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். ஹேக் சர்வதேச நீதிமன்றம் மிளாடிச்சை போர் குற்றவாளியாக பிரகடனப்படுத்தியிருந்தது. ஹேக் நீதிமன்றம் இதுவரை சந்தித்ததில் மிகப்பெரிய வழக்குதான் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக