ஐபேட் டூ என்ற பிரபல கையகத் தொடுதிரைக் கணினி ஒன்றை வாங்குவதற்காக சீனாவில் இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகம் ஒன்றை விலைக்கு விற்றுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபேட் டூ என்ற மிகவும் பிரபலமான டேப்லட் கணினி ஒன்றை எப்பாடுபட்டாவது தான் வாங்கிவிட வேண்டும் என்று இந்த இளைஞன் நினைத்திருந்தானாம.
அந்த நேரத்தில், உடலுறுப்புகளை தானம் வழங்க முன்வருவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரத்தை இணையதளம் ஒன்றில் கண்டு சிறுநீரகத்தை விற்க தான் முடிவெடுத்ததாக இந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் கூறினான்.
தொலைக்காட்சியில் இவன் தான் ஐபேட் வாங்கியக் கதையைக் கூறியிருந்தான் என்றாலும், இவன் யார் என்ற விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருக்கவில்லை. சின்னவன் ஸெங் என்று மட்டும்தான் இவனை அவை குறிப்பிட்டிருந்தன.
சட்டவிரோத முகவர்கள் இவனை மருத்துவமனைக்கு வரவழைத்து, அறுவை சிகிச்சை மூலம் இவன் கிட்னியை அகற்றிய பின்னர், இவனுக்கு நான்காயிரம் டாலர்கள் பணம் தந்திருந்தனர்.
அந்தப் பணத்தைக் கொண்டு இந்த மாணவன் ஐபேட் டூ ஒன்றும் மடிக்கணினி ஒன்றும் வாங்கினானாம்.
சின்னவன் ஸெங் புதிய கணினிகள் வைத்திருந்ததையும், அவனது உடலில் அறுவை சிகிச்சையால் வந்த செந்நிறத் தழும்பையும் பார்த்து தாயார் கேள்விகள் கேட்டு கண்டித்ததை அடுத்து அவன் நடந்தவற்றை தெரிவித்திருந்தான்.
சீனாவில் சட்டவிரோதக் கருப்புச் சந்தையில் எவ்வாறு உடலுறுப்புகள் விற்கப்படுகின்றன என்பதை இந்த சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
அந்நாட்டில் உடலுறுப்புகளுக்கு பெரும் கிராக்கியும் தட்டுப்பாடும் நிலவும் ஒரு சூழ்நிலையில் சட்டவிரோத உடலுறுப்பு விற்பனை என்பது பெருமளவில் அதிகரித்துவருகிறது.
பணத்துக்கு உடலுறுப்புகளை விற்பதென்பதை சீனாவில் 2007ஆம் ஆண்டில்தான் அதிகாரிகள் தடைசெய்திருந்தனர். மேலும் சட்டவிரோத சுயவிருப்பத்தின் பேரில் உடலுறுப்பு தானம் செய்யக்கூடிய திட்டம் ஒன்றையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக