சென்னை ஐகோர்ட்டில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அகஸ்தியர்பட்டியை சேர்ந்த முத்துகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை, சட்ட ஆணையராக நியமித்து இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கி சிலர் செயல்படுகின்றனர். இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், சகாயத்தின் விசாரணைக்கு உதவுவதாகவும், அதற்கான ஆதாரங்களை திரட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த இயக்கம் கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து துண்டு பிரசுரங்களும் வெளியிட்டு வருகிறது. இது, சகாயத்தின் விசாரணையின் சுதந்திரத்தை பாதிக்கும் விதமாக உள்ளது. இதுதவிர, இந்த இயக்கம், கனிமவள முறைகேடு தொடர்பாக 13 தீர்மானங்களை இயற்றியுள்ளது.
இந்த இயக்கத்தினரின் நடவடிக்கை, கனிமவள முறைகேடு குறித்து விசாரணை நடத்தும், சகாயத்தை நிர்பந்தம் செய்வதுபோல் உள்ளது.
மேலும், சகாயத்தின் விசாரணை தொடர்பான ஆவணங்களை, தங்களிடம் வழங்க வேண்டும் என்று அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றனர்.
இந்த இயக்கத்தின் செயலால், சகாயத்தை நியமித்து இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நோக்கமே பாழாகிவிடும். எனவே, கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் தமிழ்நாடு என்ற இயக்கத்தை தடை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.வெங்கடேஷ், ஆர்.ராஜேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் மனுவை திரும்ப பெறும்படி நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட வக்கீல்கள், மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை தொடர்ந்து, மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக