இந்தியாவில் புதிய அரசு பதவியேற்ற பிறகு கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜோ பிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் இது பற்றி பேசிய ஜோ பிட்டாஸ், மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும்பான்மைத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்களின் தகவல்கள் கூறுகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், எவன்ஜெலிக்கல் ஃபெலோஷிப் ஆப் இந்தியாவின் ஆவணங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 38-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பாக டிசம்பரில் மட்டும், கிறிஸ்தவ ஆலயங்களை எரித்தல், கடுமையாக தாக்குதல், அச்சுறுத்தல், மற்றும் போதகர்களை கைது செய்தல் போன்ற 31 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக பேச வேண்டும். அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக ஒபாமா நிர்வாகமும் இந்தியாவிடம் கண்டிப்புடன் பேச வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக