புதன், ஜனவரி 21, 2015

டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டம்

டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சதீஷ் உபாத்யாய்க்கு, தேர்தலில் போட்டியிட ‘டிக்கெட்’ வழங்காததை கண்டித்து, அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. முதல்-மந்திரி வேட்பாளராக கிரன்பேடி களத்தில் இறக்கி விடப்பட்டார். வேட்பாளர்கள் பட்டியலில், டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாய் பெயர் இடம் பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அவர்கள் நேற்று டெல்லி மாநில பா.ஜ.க. அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சதீஷ் உபாத்யாய்க்கு மெஹ்ரூலி தொகுதியில் போட்டியிட ‘டிக்கெட்’ வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உமேஷ்குமார் என்ற தொண்டர் கூறுகையில், ‘தலைவருக்கு மெஹ்ரூலி தொகுதியில் ‘டிக்கெட்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 5 மாதங்களாக அந்த தொகுதியில் ஆரம்பக்கட்ட தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் தற்போது அவருக்கு டிக்கெட் கிடைக்காததது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் முன்பு சதீஷ் உபாத்யாய் பேசி சமரசம் செய்தார்.

இதேபோல டெல்லி பா.ஜ.க. துணைத்தலைவர் சிகாராய்க்கு ‘டிக்கெட்’ கிடைக்காததை கண்டித்தும் அவரது ஆதரவாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்லா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக் கும் என்று நம்பி ஏமாற்றம் அடந்த தீர்சிங் பிதுரி என்பவர் தனது கட்சி நிர்வாகி பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சி நிர்வாகி அப்ய் தூபேக்கு, லட்சுமி நகர் தொகுதியில் ‘டிக்கெட்’ வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் கூடி, கட்சி தலைமைக்கு எதிராக கோஷமிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக