வெள்ளி, ஜனவரி 16, 2015

ராஜபக்சேவுக்கு அடுத்த இடி: கட்சி தலைவர் பதவியும் காலி

இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை விட்டு விலக சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளராக இருந்த தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சே நீக்கினார்.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியடைந்து, மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை விட்டும் ராஜபக்சே விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் கட்சிக்குள் கிளம்பியது.

இந்த எதிர்ப்பையடுத்து, தலைவர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக இன்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்துவந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் ராஜபக்சே தோற்பது உறுதி என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இதனையடுத்து, ராஜபக்சேவின் தேர்தல் பிரசார ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்த பசில், அமெரிக்காவுக்கு சென்று விட்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதால் தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா விரைவில் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக