வியாழன், ஜனவரி 22, 2015

ரபேல் நடால் (ஸ்பெயின்) போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார்.

 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர்  ரபேல் நடால் (ஸ்பெயின்) 4 மணி நேரம் போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார். மெல்போர்னில் நேற்று நடந்த இப்போட்டியில், நடால்  (3வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் ஸ்மிக்செக் (112வது ரேங்க்) 6-3 என  வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து விடாப்பிடியாக  போராடியதால், ஆட்டம் டை பிரேக்கர் வரை நீடித்தது. 

81 நிமிடம் நடந்த இந்த செட்டை ஸ்மிக்செக் 7-6 (7-2) என்ற கணக்கில் கைப்பற்றி 2-1 என முன்னிலை பெற்றார். நான்காவது செட்டில் அவரது சர்வீஸ்  ஆட்டங்களை முறியடித்து முன்னேறிய நடால் 6-3 என வெற்றி பெற, இரு வீரர்களும் தலா 2 செட்களில் வென்று சமநிலை வகித்தனர்.  இதையடுத்து, 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த செட்டில் அனுபவ ஆட்டத்தை  வெளிப்படுத்தி வென்ற நடால் 6-2, 3-6, 6-7 (2-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 4 மணி, 12 நிமிடம் போராடி வென்று 3வது சுற்றுக்கு  முன்னேறினார். முன்னணி வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்த ஸ்மிக்செக் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார். 

இது 2வது சுற்று தான் என்றாலும், தோல்வியின் விளிம்பு வரை சென்று மீண்டதால் நடால் உணர்ச்சிப் பெருக்குடன் சட்டையை கழற்றி கண்ணீர்  மல்க மைதானத்தை முத்தமிட்டது அவரது ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.  டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த  இப்போட்டியில், ஸ்மிக்செக் 15 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு நடாலை (3) திணறடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்),  ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), ரிச்சர்டு காஸ்கே (பிரான்ஸ்), தாமஸ் பெர்டிச் (செக்.), பாக்தாதிஸ் (சைப்ரஸ்)  ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை அலெக்சாண்ட்ரா  பனோவாவை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் யூஜெனி பவுச்சார்டு (கனடா), எகடரினா மகரோவா (ரஷ்யா), சாரா எர்ரானி (இத்தாலி), ஷுவாய்  பெங் (சீனா), பெத்தானி மேட்டக் சேண்ட்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில்  இந்தியாவின் சானியா மிர்சா - சூ வெய் ஸை(சீன தைபே) ஜோடி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் இரிகோயென் (அர்ஜென்டினா) - ஓப்ராண்டி (சுவிஸ்)  ஜோடியை மிக எளிதாக வீழ்த்தியது.ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரேவன் கிளாசன் (தென் ஆப்ரிக்கா)  ஜோடி 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லிப்ஸ்கி - ராம் ஜோடியை வென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக