அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று(திங்கட்கிழமை) அவர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டெல்லி ராஜபாதையில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் கண்கவர் அணிவகுப்பையும், விமான சாகச காட்சிகளையும் பார்வையிடுகிறார்.
வழக்கமாக இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பின்போது நமது ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரி வடிவமைப்புகள் இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோன்ற அணிவகுப்பு நடைபெறுகிறது.
அப்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்படும். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, ஆயுதப்படையின் முதன்மை தளபதி ஆகியோர் வணக்கம் செலுத்தி அணிவகுப்பை தொடங்கி வைப்பார்கள்.
இந்த அணிவகுப்பில், முதலில் ராணுவ கண்டுபிடிப்புகளில் முழுவதும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாரான நவீனரக ஆகாஷ் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, மேம்படுத்திய நவீன மிக்-29 போர் விமானம், அதிநவீன பீஷ்மா போர் டாங்கி, தானியிங்கி பிரமோஸ் ஏவுகணை, ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் மற்றும் அதிநவீன துருவ் ராணுவ ஹெலிகாப்டர்களின் மாதிரிகள் இடம் பெறுகின்றன.
இதைத் தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழுவினர் அணி வகுத்து செல்வார்கள். ஒட்டகங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சவாரி செய்து வாத்தியங்களை இசைத்தவாறு அணிவகுத்து செல்லும் காட்சி அனைவரையும் ஈர்க்கும்.
இதேபோல் ராணுவ வீரர்களின் பல்வேறு விதமான மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவையும் இந்த அணிவகுப்பில் இடம் பெறுகின்றன. இந்திய விமானப்படை விமானங்களின் சாகச கண்காட்சியும் நடக்கிறது.இந்த சாகசங்கள் அனைத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோருடன் கண்டு களிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக