வியாழன், ஜனவரி 08, 2015

சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கவலை அடைந்துள்ளன. நியூயார்க்கில் உள்ள இன்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் 47.75 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது.  
இந்த திடீர் சரிவால் கெய்ர்ன், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா போன்ற இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியாவும் தங்களது மானிய சுமையைக் குறைப்பதற்காக, 15 சதவீத லாபத்தை மட்டும் நிர்ணயிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலைச் சரிவால் தங்களது உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை குறையும் என்பதால் பெயிண்ட் மற்றும் டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. 

2014 ஜனவரியில் 107.57 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 51 டாலராக உள்ளது. இதற்கிடையே உள்ள வித்தியாசம் 52.59 சதவீதம். அதே நேரம் 2014 ஜனவரியில் 72.43 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 61.33 ரூபாய். இதன் வித்தியாசமோ வெறும் 11 சதவீதம் மட்டுமே. கச்சா எண்ணெயின் விலை உயரும் போது மட்டும் இரவோடு இரவாக பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசு. தற்போது நிலவும் கச்சா எண்ணெய் விலையின் படி பெட்ரோல் விலையை நிர்ணயித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 ரூபாயாக குறைய வேண்டும்.

ஏழைகளுக்கான மத்திய அரசு எப்போது 38 ரூபாய்க்கு பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்பதே இப்போதைய கேள்வி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக