புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக விதிமுறைக்கு மாறாக அமையும் சூழல் நிலவுகிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் உண்டு. ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை கொண்டு அடித்தளமாக உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது கட்சி வேட்பாளரை பொது வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கேட்டதாலும் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கிறது.
தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் வெற்றிக்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பாடுபடுவார்கள். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்பதை அப்போது தான் கூறமுடியும். ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட ஒரு நேர்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாத நிலையை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக