தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது. இதனால், சுமார் 70 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்தை ஜனவரி 18-ம் தேதியும் (இன்று), இரண்டாம் தவணை சொட்டு மருந்தை பிப்ரவரி 22-ம் தேதியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்காக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் 43 ஆயிரம் சொட்டு மருந்து மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1652 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிப்பவர்களுக்காக 1000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்தை ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் போட்டுக் கொள்ளலாம். அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரிசங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என சுமார் 2 லட்சம் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 3000 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முகாமில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமாக கொடுக்கப்படும் சொட்டு மருந்துக்கு மாற்றல்ல. எனவே, ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர் சொட்டுமருந்து முகாமுக்கு அழைத்துச் சென்று கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக