இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்ய மஹராஷ்ட்ரா அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
கடந்த 2,3 ஆண்டுகளாக அவ்வமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து ஆதாரங்கள் இல்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கா மஸ்ஜித், மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை சதித்திட்டம் தீட்டி நடத்திய அபினவ் பாரத் அமைப்பை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) படி தடைச் செய்யவேண்டும் என்று கடந்த மாதம் மத்திய அரசு மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அபினவ் பாரத்தின் இயக்க கட்டமைப்பைக் குறித்தோ, தலைமை மற்றும் உறுப்பினர்களை குறித்தோ தெளிவான விபரம் இல்லை என்று கடிதம் கூறுகிறது.
யு.ஏ.பி.ஏ சட்டத்தின் படி ஒரு அமைப்பை தடைச் செய்ய நீதிமன்றத்தின் அங்கீகாரம் தேவை. மறு ஆய்வு கமிட்டியும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதற்கு தேவையான ஆதாரங்கள் கைவசம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது.
அபினவ் பாரத்தின் பிரபல தலைவர்களான லெஃப்டினண்ட் கர்னல் புரோகித், சன்னியாசினி ப்ரக்யா சிங் தாக்கூர், லோகேஷ் சர்மா, சுவாமி அஸிமானந்தா, கமல் சவுகான், ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு தற்போது மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் பெயரளவில் மட்டுமே இயங்குகிறதாம். ஆகையால் தடைச் செய்யவேண்டாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் அஹ்மதாபாத், உஜ்ஜையின், ஃபரீதாபாத், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், புனே, நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
2012-ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றத்திலும் அபினவ் பாரத்தை தடைச் செய்ய மஹராஷ்ட்ரா அரசு கோரிக்கை விடுத்தது.
வினாயக் தாமோதர் சாவர்க்கரின் சகோதரனுடைய மருமகளும், காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சேயின் பேத்தியுமான ஹிமானி சாவர்க்கர் என்ற ஹிந்துத்துவா பெண் தீவிரவாதிதான் இவ்வமைப்பின் தலைவராக கருதப்படுகிறார். இவ்வமைப்பு ரகசிய இடங்களில் ஆயுதப்பயிற்சி நடத்தி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு ஹிந்துத்துவா அமைப்புகளின் உறுப்பினர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயல்படுகின்றனர்.
Info : Newindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக