உ.பி., அரசின் தடையை மீறி அயோத்திக்கு யாத்திரை செல்ல விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சரயு நதிக்கரையில் பூஜை செய்ய முயன்ற தொகாடியா கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அயோத்திக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் யாத்திரைக்கு தடை விதித்து அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசத்தில் 6 மாவட்டங்கள் வழியாக 252 கி.மீ. தூரம் செல்லும் இந்த யாத்திரைக்கு ‘கோசி பரிக்கிரமா யாத்திரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 13 ந்தேதி வரை யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த யாத்திரைக்கு உத்தரபிரதேச அரசும், கோர்ட்டும் தடை விதித்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது. இதையடுத்து மாநில அரசு அயோத்தி மற்றும் 6 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அயோத்தியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். நகரை சுற்றிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அலகாபாத் நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.
மேலும் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த விஷவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 70 பேரை முன் எச்சரிக்கையாக கைது செய்ய பைசா பாத் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கை கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது விஷவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் என 350 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்காக அயோத்தியையொட்டியுள்ள பைசாபாத் நகரில் உள்ள 10 பள்ளிக்கூடங்கள் தற்காலிக ஜெயிலாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் 22 தற்காலிக ஜெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பிரவீண் தொகாடியா தலைமையில் அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பூஜை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பூஜை நடைபெறவில்லை.
இன்று காலை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி பேரணி வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 50 ஆயிரம் பேர் வரை பேரணியாக அயோத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதனால் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
இதற்கிடையே யாத்திரையில் பங்கேற்க மூத்த தலைவரான அசோக் சிங்கால் இன்று பாட்னா விமான நிலையம் வந்தார். அயோத்திக்கு செல்ல விடாமல் அவரை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு தலைவரான வேதாந்தியும் அயோத்தியில் நுழைய முயன்றபோது கைதானார். யாத்திரை ஒருங்கிணைப்பாளர் நிர்த்திய கோபால் இன்று காலை அயோத்திக்குள் நுழைய முயன்றபோது கைதானார்.
யாத்திரையில் பங்கேற்க தொண்டர்களுடன் வந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராம்சந்திர யாதவ் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி புறப்பட்டவர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
யாத்திரை என்ற பெயரில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விபின் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Info : NewIndia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக