வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

“முஸ்லிம்களுக்கு சட்ட உதவி மட்டும் போதாது!”: பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு சட்ட உதவி மட்டும் போதாது, சிறப்பு விசாரணை கமிஷன்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.


தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின் இவர் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று அணைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப் பட்ட அப்பாவியான அமீர் கான் கூறியது: “இவ்விவகாரத்தில் அரசு தீவிரமாக தலையிட்டு, வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணை கமிஷனை நியமிக்கவேண்டும்.”

அமீர் கான் உள்பட தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட ஏராளமானோருக்காக நீதிமன்றங்களில் வாதாடிய மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி கூறியது: “குற்றம் சாட்டப் பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற அரசு வழக்குரைஞர்களால் முடியாது. சொந்தமாக வழக்குரைஞர் களை நியமிக்க இயலாதவர்களுக்கு நீதிமன்றம் வழக்குரைஞர்களை அளிக்கிறது. இத்தகைய வழக்குகளில் போலீசுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே முறைகேடான தொடர்பு உள்ளது. கைதிற்கு பிறகு தங்களுக்கு விருப்பமான வழக்குரைஞர்களை போலீஸ் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வழக்குரைஞர்கள் திறமை குறைந்தவர்களாவர். இதன் மூலம் ஏராளமானோர் ஒருபோதும் தப்பிக்க முடியாதவாறு வலையில் சிக்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு நம்பிக்கையான வழக்குரைஞரை ஏற்பாடு செய்து அவர்களுக்கு கட்டணத்தை அரசு அளிக்க வேண்டும்.”

ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியா இயக்குநர் மீனாட்சி கங்கூலி கூறியது: “தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அத்தியாவசியமானது. ஆனால், பல வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் அத்துமீறுகிறது. இதர வழக்கறிஞர்கள் மூலம் தீவிரவாத வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தாக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆகையால் சட்ட உதவி மட்டும் போதாது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக