புதன், ஆகஸ்ட் 21, 2013

காலித் முஜாஹித் படுகொலை : 3 மாதம் முடிந்தும் நீதி கிடைக்காத தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

லக்னோ : உ.பி. சட்டசபைக்கு வெளியே நடத்தப்படும் காலவரையற்ற தர்ணா போராட்டத்திற்கும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் இன்றோடு (ஆகஸ்ட் 19) மூன்று மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன.


பயங்கரவாதம் என்ற பெயரில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கும் அமைப்பான ரிஹாய் மன்ச் கடந்த மே 20ம் தேதி முதல் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகிறது. காலித் முஜாஹித் கடந்த மே 18ம் தேதி காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும்பொழுது மர்மமான முறையில் மரணமடைந்தார். காலித் முஜாஹிதின் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்யவும், ஆர்.டி. நிமேஷ் கமிஷன் அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கை அறிக்கையை வெளியிடவும், பயங்கரவாதம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்கக் கோரியும் இத் தர்ணா போராட்டமும், தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இன்றுடன் இத்தொடர் போராட்டம் மூன்று மாதங்கள் நிறைவுற்றும் உ.பி. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. கோரக்பூர் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் காலித் முஜாஹிதுடன் கைது செய்யப்பட்ட தாரிக் காஸ்மியின் மாமனார் ஹாஃபிஸ் ஃபயாஸ் அஹமத் இந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்.
அவருடைய மருமகன் தாரிக் காஸ்மி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது வீட்டில் தொடர்ந்து பீதி நிலவுவதாகவும், மொத்தக் குடும்பமும் கடுமையான மன அழுத்தத்தில் வாழ்வதாகவும் அவர் சொன்னார். காலிதின் படுகொலையை அடுத்து தாரிக்கின் உயிர்ப் பாதுகாப்பு குறித்து மொத்தக் குடும்பமும் கவலை கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மே 18ம் தேதி ஃபைஸாபாத் நீதிமன்றத்திலிருந்து திரும்பும் வேளையில் மர்மமான முறையில் காலித் அநியாயமாக, கொடூரமாகக் கொல்லப்பட்டார். பாராபங்கியிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டபொழுது இறந்த உடல்தான் இங்கே கொண்டு வரப்பட்டது என்று அங்குள்ள மருத்துவர்கள் அறிவித்தனர்.

பின்னர் காலிதுடைய மாமனார் ஸாஹிர் ஆலம் ஃபலாஹி அளித்த புகாரின் பேரில் 42 காவல்துறை அதிகாரிகள் மேல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங், ஏ.டி.ஜி. பிரிஜ்லால் உட்பட காலிதைக் கைது செய்தபொழுது பணியிலிருந்த அதிகாரிகள் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ரிஹாய் மன்ச்சின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மத் ஷுஐப் கூறுகையில், “சமாஜ்வாதி கட்சி அரசு கமுக்கமாக இந்த வழக்கை தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திசை திருப்ப முயற்சி செய்கிறது” என்றார்.

“இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளையும், உளவுத்துறை அதிகாரிகளையும் காப்பாற்றுவதற்கு அரசு முயல்கிறது” என்று ரிஹாய் மன்ச்சின் பேச்சாளர் ராஜீவ் யாதவ் குற்றஞ்சாட்டினார். போலி என்கவுண்டரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் சம்பவமும், காலித் முஜாஹித் கொலை சம்பவமும் பலவிதத்தில் ஒத்துப்போவதாக அங்குள்ளவர்கள் கூறினர்.

காலித் முஜாஹித் நீதிமன்றத்திலிருந்து திரும்பும் வழியில் மயங்கிவிட்டார் என்றும், உடனே அவர் பாராபங்கியிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும், அங்கே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என்று கூறியதாகவும் போலீஸ் புளுகியது.

மரணத்திற்கான காரணம் இறந்த உடல் பரிசோதனை அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைத் தெளிவாக்குகின்றன.

நல்ல வெளுத்த முகம் கொண்ட காலிதின் முகம் கருத்துப் போய் இருந்தது. முகம் முழுவதும் காயங்களும், ரத்தக் கறைகளும், ஒரு வெட்டுக் காயமும் காணப்பட்டன. கழுத்து வீங்கிப் போயிருந்தது. அதாவது கழுத்து முறுக்கப்பட்டிருக்கிறார். முழங்கையும், கணுக்காலும் கருத்தும் ரத்தக் கறைகளுடனும் காணப்பட்டன.

காலிதும், தாரிக் காஸ்மியும் கடந்த 2007 டிசம்பர் 20ம் தேதி பாராபங்கியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் (எஸ்.டி.எஃப்.) கைது செய்யப்பட்டனர். நிறைய வெடிபொருட்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக வழக்கம் போல் காவல்துறை சொன்னது. கோரக்பூர், ஃபைஸாபாத், லக்னோ ஆகிய இடங்களில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகளில் இவர்களுக்குப் பங்குண்டு என்று எஸ்.டி.எஃப். கூறியது.

இந்தக் குண்டுவெடிப்புகளை விசாரிக்க நீதிபதி ஆர்.டி. நிமேஷ் தலைமையில் நிமேஷ் கமிஷன் என்ற விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் எஸ்.டி.எஃப். கூறிய குற்றச்சாட்டுகளை சரி காணவில்லை.

காலிதின் குடும்பத்தாரும், மனித உரிமை அமைப்புகளும் உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீஸ் நடத்திய நாடகம்தான் இந்தக் கைதுகள் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

ஷப்னம் ஹாஷ்மி உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் ரிஹாய் மன்ச் நடத்தும் இந்தத் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக