புதுடெல்லி: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் தேதியை “எகிப்து ஆதரவு தினமாக” அனுசரிக்கும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து அதன் தேசியத் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி வருமாறு:
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிர் வரும் ஆகஸ்ட் 30 அன்று “எகிப்து ஆதரவு தினமாக” அனுசரித்து தேசிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது. எகிப்தில் இராணுவ பலத்துடன் ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள் சாதாரண குடிமக்களுக்கு செய்து வரும் கொடுமைகளைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்பப்படும். அத்தோடு ஜனநாயகத்திற்கு ஆதரவுக் குரல் எழுப்பப்படும். எகிப்து மக்கள் தங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடாக மலர வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். அரபு வசந்தம் எகிப்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த அரபுலகுக்கே நம்பிக்கைக் கீற்றைத் தந்தது.
ஆனால் எகிப்தின் இராணுவம் இந்த ஜனநாயகப் புரட்சியை முறியடிப்பதற்கு திட்டம் போட்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டுள்ளது. எகிப்தைத் தொடர்ந்து துநீசியாவிலும் இப்பொழுது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி வர ஆரம்பித்துள்ளதைக் காண்கிறோம். இது சங்கிலித் தொடர் போல் தொடரும் என்பதைத்தான் அரபு நாடுகளில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த சதித் திட்டங்களின் பின்னணியில் யார் உள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் ஜனநாயகத்தின் பெயரில் அழித்து நாசமாக்கிய மேலை நாட்டு சக்திகள் இன்று எகிப்தில் நடக்கும் கொடூரங்களைக் கண்டும் காணாதது போல் வாய் மூடி இருக்கின்றன. எகிப்தில் இராணுவத்தின் நடவடிக்கையை இன்று வரை ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை அறிவிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களுக்கு உதவிகளை இந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒட்டு மொத்த அரபு உலகத்தின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.
இதன் அடிப்படையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆகஸ்ட் 30 அன்று தேசிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, எகிப்தின் இப்போதைய அராஜக இராணுவ அரசுடனான அணைத்து ராஜாந்திர தொடர்புகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் எனவும், மீண்டும் முஹம்மது முர்சியை எகிப்திய அதிபராக்க இப்போதைய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் கோரிக்கைகள் வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்த பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் எகிப்திய இராணுவத்தையும், அதன் பொம்மை அரசையும் தண்டிக்கும் முகமாக அங்கே வழக்கு தொடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சாரத்தை முடிக்கும் முகமாக டெல்லியில் எகிப்து தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும். ஜனநாயகத்தை விரும்பும் அதனை மக்களையும், அமைப்புகளையும் எங்களுடன் கை கோர்த்து எகிப்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும்படி பாபுலர் ப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக