ஹைதரபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வயதான பிரதமரை விவாதத்துக்கு அழைப்பதற்கு பதில் தன்னோடு விவாதம் புரிய தயாரா என்று அஸதுத்தீன் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த மஜ்லிஸே இத்திஹாதுன் முஸ்லீமின் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பேசிய அதன் தலைவர் அசதுத்தீன் உவைஸி ராமராவை மோடி புகழ்ந்து பேசியதால் மோடியுடன் கூட்டணி சேர சந்திரபாபு நாயுடு நினைத்தால் அவர் மிகப் பெரும் தோல்வி அடைவார் என்று எச்சரித்தார்.
மேலும் மோடியின் வளர்ச்சியில் பிஜேபி போன்று காங்கிரஸுக்கும் பங்கு உள்ளது என்று கூறிய உவைஸி குஜராத்தில் கலவரங்களை நடத்திய மோடி இந்தியா முழுக்க சுதந்திரமாக சுற்ற அனுமதிக்கும் காங்கிரஸ், தம்மை ஆந்திராவில் பிற மாவட்டங்களுக்குச் செல்லக்கூட தடை விதிப்பதாக குற்றம் சாட்டினார். மாலேகானுக்கு தாம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து பேசிய உவைஸி, மாலேகானில் குண்டு வைத்தவர்களுக்கு இத்தடை இல்லை என்று குறிப்பிட்டார். நிச்சயம் தாம் ஒரு நாள் குஜராத்திலும் கோலோச்சுவோம் என்றும் உவைஸி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மதசார்பற்ற கட்சிகள் எனும் போர்வையில் வரும் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரியானவை என்று கூறிய உவைஸி பள்ளிவாயில் சுவரை இடித்ததற்காக அதிகாரியை பணி இடை நீக்கம் செய்த அகிலேஷ் யாதவ் காவலில் கொல்லப்பட்ட காலித் முஜாஹித் குடும்பத்தினர் கடந்த பத்து மாதங்களாக செய்யும் ஆர்ப்பாட்டத்தை கண்டு கொள்ளாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
நாய் குட்டிகளை போல் தம் தந்தை ஓட்டுக்கும் நோட்டுக்கும் அரசியல் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட உவைஸி தமது கட்சி எம்மதத்துக்கும் எதிரானதல்ல என்றார். முஸ்லீம்களின் உரிமைகளை அழிக்க நினைக்கும் சங் பரிவாரங்களை மட்டுமே தாம் எதிர்ப்பதாகவும் மோடி தாம் சொல்லும் புள்ளி விபரங்களில் உண்மையாளராக இருந்தால் வயதான பிரதமரை விவாதத்துக்கு அழைக்காமல் தன்னோடு விவாதம் புரிய தயாரா என்றும் உவைஸி கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக