பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க வின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி இன்று சேலம் வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வரும் அத்வானி, மரவனேரியில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இரங்கல் கூட்டத்திற்குப் பிறகு சேலம் இரும்பாலைப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அத்வானி மறுநாள் காலை மீண்டும் டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்வானியின் வருகையையொட்டி சேலம் நகரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக எல்லையான ஓசூர், வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரம் முழுவதும் காவி கொடிகளும், காக்கி தலைகளுமாக காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக