சனி, மே 09, 2015

ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு: பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். 

இதற்கிடையே திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் மீண்டும் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்பித்தார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்தநிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பெங்களுரு நகரில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் தீப்ப்பு வெளியாகும் நாளன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பெங்களூரு போலீசார் தெரிவிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக