ஞாயிறு, மே 03, 2015

நேபாள பேரழிவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,040 ஆக உயர்வு

நேபாள பேரழிவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,040 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25–ந்தேதி காலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் உலுக்கியது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரம் வரை இருக்கக்கூடும் என பிரதமர் சுசில் கொய்ராலா கூறியுள்ளார். எனவே இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர சர்வதேச சமூகம் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாள நிலநடுக்கத்தால் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. சபை கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிட இடிபாடுகள் குவியல் குவியலாக காணப்படுகிறது. இவற்றை அகற்றி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் இந்தியா உள்பட சர்வதேச மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நேபாளத்தின் மலைப்பகுதிகள் ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது. நிவாரண பணிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மனிதநேய அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பேரழிவு நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்துக்கு, நேபாளத்தில் மட்டும் 7,040 பேர் உயிரிழந்ததுடன், 14,123 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டவர்களும் உயிரிழந்து உள்ளனர். 

வீடுகளை இழந்தவர்கள் கூடாரங்களிலும், வாகனங்களிலும், திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் பலர் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பீதியில் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விருப்பம் இன்றி உள்ளனர். திறந்தவெளியிலும், கூடாரங்களிலும் தங்குவதிலும் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். மக்கள் நேபாள அரசு மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள முடியாமல் அரசு திணறி வருகிறது. நிவாரண பணிகளில் அரசு மிகவும் மந்தமாக செயல்படுவதை மக்கள் கண்டித்துள்ளனர். 

தலைநகரான காத்மாண்டுவில் வேலை, தொழில் விஷயமாக தங்கியிருந்த சுமார் 10 லட்சம் பேர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக