சனி, மே 16, 2015

மோடி அரசின் மோசமான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்புக்குக் கதவைத் திறப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோடி அரசின் மோசமான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆபத்தான தொழில்கள் மட்டுமல்லாமல் எந்தத் துறையாயினும் 14 வயதுக்குட்பட்ட குழந்தை உழைப்பு தடை செய்யப்படும், 14-18 வயது வரம்பினரும் ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்பன போன்ற திருத்தங்களை மத்திய அரசு முன் மொழிந்தாலும், அதற்கான விதிவிலக்குகள் கண்டனத்துக்குரியவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. ஒருபுறம் குழந்தை உழைப்பை ஒழிக்கும் தோற்றமும் மறுபுறம் சிலவற்றில் அதை சட்ட ரீதியாக்கும் ஏற்பாடுகளும் ஒருங்கே இணைந்ததாக மத்திய அரசின் முயற்சி இருக்கிறது.

குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆபத்தற்ற குடும்பத் தொழிலில் ஈடுபடலாம் என்ற மத்திய அரசின் சட்டத்திருத்தம் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பம் என்பதற்கு என்ன வரையறை? பக்கத்து உறவு, தூரத்து உறவு என்று எதை வேண்டுமானாலும் சொல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்விக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் அவர்கள் பணி செய்யலாம் என்ற பிரிவை எப்படி அமல்படுத்த முடியும், பாதிப்பு என்பதற்கான அளவுகோல் என்ன என்பதெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாத நுட்பமான அம்சங்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் அவர்களின் விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற வளர்ச்சி அம்சங்கள் அடிபடும். இது ஐநாவின் பல்வேறு உடன்படிக்கைகளுக்கு முரணானது.  கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் குழந்தை உழைப்பு தடை சட்டத்தையும் அமல்படுத்த முடியும். இத்திருத்தத்தின் மூலம் கல்வி உரிமை சட்டத்தையும் மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது. 

“குழந்தைகள் குடும்பத் தொழிலில் மூத்தவர்களுடன் சேர்ந்து வேலை கற்றுக் கொள்ளும் இந்திய சமுதாயத்தின் சமூகத் தன்மையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை” என்ற அரசாங்கத் தரப்பு வாதம் பிரச்னையைத் திசை திருப்புகிறது. கற்றுக் கொள்வது வேறு, உழைப்பை சட்ட ரீதியாக்குவது வேறு. அப்படியே திறன்கள் தேவை என்றால் பாடத்திட்டத்தில் இருக்கலாம். எல்லா குழந்தைகளும் கற்றுக் கொள்ள முடியும். குழந்தை உழைப்பும் சேர்கிறது என்றாலே, ஒட்டு மொத்தக் கூலி குறைக்கப்படுதற்கு அது இட்டுச் செல்லக் கூடும். இது உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கும். மேலும் குடும்பத் தொழில் சில சமயம் குலத் தொழிலாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. இது பல பத்தாண்டு சமூக முன்னேற்றத்தைக் கேள்விக்குறியாக்கும், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு சிறுவர்களையும், சிறுமிகளையும் கூடுதலாக பாதிக்கும்.

அதே போல் சர்க்கஸ் தவிர இதர பொழுதுபோக்குத் துறைகளில் குழந்தைகள் பயன்படுத்தப் படலாம் என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய அம்சமாகும். குழந்தைகள் நட்சத்திரங்களாக வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஸ்டுடியோக்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது, கல்வியைப் புறக்கணிப்பது, இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குவது, இதற்காக இடம் பெயர்வது, குழந்தைகளைக் கடத்துவது  போன்ற குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் குழந்தை உழைப்பை சட்டரீ தியாக்கக் கூடாது, அதற்கான திருத்தங்கள் ரத்து செய்யப் பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக