ஞாயிறு, மே 24, 2015

வெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு

பிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது சியோலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசும் போது, முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர்.
ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மோடி வெளிநாட்டில் போய் இந்தியாவை பற்றி தவறாக பேசியது வெட்கக்கேடானது என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் மோடியின் பேச்சை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சந்தீப் சுக்லா என்பவர் கான்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனா ஸ்ரீவத்சவா முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் பிரதமர் மோடி சியோலில் இந்தியர்கள் பற்றி காயப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை தொலைக் காட்சிகளில் பார்த்தேன். அந்த வீடியோவை மனுவுடன் இணைத்துள்ளேன். மோடி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு வருகிற ஜூன் மாதம் 10–ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக