ஞாயிறு, மே 01, 2011

'ஸ்பெக்டரம்' - பொதுக் கணக்குக் குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது

இந்திய மக்களவை
இந்திய மக்களவை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழுவின் அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியின் பணிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் குழு தயாரித்த வரைவு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் மீதும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தது. கசியவிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாயின.

காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் எதிர்ப்பு
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
இந் நிலையில், அந்த அறிக்கையை இறுதி செய்ய பொதுக்கணக்குக் குழு கூடிய போது காங்கிரஸ், திமுக, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் 11 உறுப்பினர்கள் சேர்ந்து அந்த அறிக்கையை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதற்கு முன்னதாக நடந்த கடும வாக்குவாதத்தை அடுத்து, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு வெளியே சென்றார் ஜோஷி.
அந்த அறிக்கை சட்டப்படி செல்லாது என்று கூறப்படும் நிலையில், அதை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கிறார் ஜோஷி. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், அவரது முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிரதமரைப் பற்றி அறிக்கையில் குறிப்பிடுவதை காங்கிரஸார் விரும்பாததால் தான் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்கள் என்று ஜோஷி குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய முறைகேடு தொடர்பான அறிக்கையை சீர்குலைக்க முயல்வது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றார் ஜோஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக