வெள்ளி, மே 20, 2011

ஆயுத மழை விவகாரம்- காலாவதியான வாரண்டுடன் கிம் டேவியை பிடிக்கச்சென்ற சி.பி.ஐ

purulia-arms-drop1-270x170
புதுடெல்லி:மேற்குவங்காள மாநிலம் புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரிட்டனை சார்ந்த கிம் டேவியை பிடிக்க டென்மார்க்கிற்கு கொண்டு சென்ற வாரண்ட் காலவதியானது என தெரியவந்துள்ளது. இது கிம் டேவியை கைதுச்செய்வதில் சி.பி.ஐக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கில் கைதுச் செய்யப்பட்ட கிம்டேவியை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் பகுதியாக சி.பி.ஐ அதிகாரியும், வழக்கறிஞரும் டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்றனர். ஆனால், கிம் டேவிக்கு எதிராக கொல்கத்தா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டின் காலாவதி கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.  இதனால் சி.பி.ஐ தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை.
கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணையை டென்மார்க் உயர்நீதிமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் நடத்துகிறது. இங்கு விசாரணை நடைபெறும்போது கிம் டேவியின் வழக்கறிஞர் சி.பி.ஐ சமர்ப்பித்த வாரண்ட் காலாவதியாகிவிட்டது என சுட்டிக்காட்டினார்.

இதனால் கொல்கத்தாவில் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து புதிய வாரண்டை பெறுவதற்கான முயற்சியை சி.பி.ஐ துவக்கியுள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த 50 தேடப்படும் பயங்கர குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் இந்தியாவில் வசிப்பதாக தகவல் வெளியானது சர்வதேச அளவில் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது.
உள்துறை அமைச்சகத்தின் தவறு என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டதற்கு பின்னர் கிம் டேவியை பிடிக்க காலாவதியான வாரண்டுடன் டென்மார்க் சென்ற சி.பி.ஐ அங்குள்ள நீதிமன்றத்தில் தலைக்குனிவை சந்தித்துள்ளது.அரசின் வெட்கக்கேடான இச்செயலுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய உளவுத்துறையும்,பிரிட்டீஷ் உளவுத்துறையும் இணைந்து திட்டமிட்டு நடத்தியதுதான் மேற்குவங்காளத்தில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட சம்பவம் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கிம் டேவி கூறியிருந்தான்.
மேற்குவங்காளத்தில் கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி சி.பி.எம் அரசை கவிழ்க்க அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் போட்ட திட்டம் என கிம்டேவி குற்றஞ்சாட்டியிருந்தார்.1995-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி டேவியின் தலைமையில் விமானத்தில் வந்த கும்பல் மே.வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் ஆயுதங்களை கொட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக