செவ்வாய், மே 24, 2011

குழந்தைகளைத் தாக்கிய ஸியோனிஸத் தீவிரவாதிகள்


கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.05.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஷெய்க் ஜர்ராஹ் பலஸ்தீன் குடியிருப்பைச் சுற்றிவளைத்த ஸியோனிஸ தீவிரவாதிகள் குழுவொன்று பலஸ்தீன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்படும் பலஸ்தீன் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்குமுகமாக மேற்படி குடியிருப்பைச் சேர்ந்த பலஸ்தீனர்கள் ஸியோனிஸத் தீவிரவாதிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அப்பிரதேசமெங்கும் பெரும் பதட்டநிலை ஏற்பட்டது. 
இந்நிலையில் அதிரடியாக அங்கு வந்திறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்படி குடியிருப்புப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்நடத்தியது.
சம்பவத்தை நேரில் கண்ட அல் ஜர்ராஹ் குடியிருப்புவாசியும் ஊடகவியலாளருமான ரஸீம் அப்துல் வாஹித் விபரிக்கையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தமது குழந்தைகள் தாறுமாறாகத் தாக்கப்படுவது பொறுக்க முடியாமலேயே பலஸ்தீனர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ரிஃப்கா அல் குர்த் எனும் பலஸ்தீன் பெண்மணியின் வீட்டின் ஒரு பகுதியைப் பலவந்தமாக அபகரித்துக் கொண்டிருக்கும் ஸியோனிஸத் தீவிரவாதி ஒருவர் இப்பகுதியில் வசிக்கும் பலஸ்தீன் பெண்களையும் சிறுவர்களையும் அச்சுறுத்தும் வகையில் தனது நாயை அடிக்கடி கட்டவிழ்த்து விடுவது வழக்கம். ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களின் இதுபோன்ற அடாவடிகளும் சேட்டைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், வம்புச் சண்டைக்கு வந்து அப்பாவிப் பலஸ்தீன் பெண்களையும் குழந்தைகளையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய ஸியோனிஸத் தீவிரவாதிகளை அங்கிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, அங்கே இருந்த பலஸ்தீன் இளைஞர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ததோடு, அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தது" என்று கவலையுடன் தெரிவித்தார்.
அல் ஜர்ராஹ் குடியிருப்பில் பலஸ்தீனர்களுக்கும் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில்  ஏற்கெனவே பலதடவைகள் மோதல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் வாழும் பலஸ்தீனரான ஜெரூசலவாசிகள், ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகளின் இடையறாத தொந்தரவுகளுக்கு மத்தியிலும் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தொடர்ந்தும் போராடிவருவதோடு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கெடுபிடிகளையும் துணிவோடு எதிர்கொண்டு வருகின்றனர்.
என்றபோதிலும், அங்கு காலங்காலமாக வாழும் பலஸ்தீனர்களை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்றி ஜெரூசல நகரை முழுமையாக யூதமயப்படுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு தனது கெடுபிடிகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அதற்கேற்றாற் போல் புதிய பல சட்டங்களையும் பிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக