சனி, ஆகஸ்ட் 22, 2015

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்

குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம்.

2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது முதல் மந்திரியாக இருந்த மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட்.

கோத்ராவில் 59 கரசேவகர்கள் ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கு இந்துக்கள் பழிதீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அப்போதைய முதல்வர் மோடி காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு, கடந்த 2011 முதல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் சஞ்ஜீவ். காரணம் கூறாமல் விடுப்பு எடுத்தது தான் அவரது இடைநீக்கத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. சில நாட்களுக்கு முன் அதே காரணத்தை கூறி நிரந்தரமாக அவரை பணிநீக்கம் செய்துள்ளது குஜராத் அரசு.

இந்நிலையில் லண்டனில் படிக்கும் சஞ்ஜீவ் பட்டின் மகன் சாந்தனு பட் பணிநீக்கம் செய்யப்பட்ட தனது தந்தைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்... ”மிகவும் ஆபத்தான, பலம் பொருந்திய அரசியல் அமைப்பை எதிர்த்து அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றதிற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் 2002-லிருந்து உறுதியுடன் போராடி வருகிறீர்கள். உங்களின் இந்த செயலுக்காக நான் தலை வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். உங்கள் மகனாக, இந்த அற்புதமான நாட்டின் படித்த மற்றும் பொறுப்புமிக்க குடிமகனாக நான் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எப்போதும் போல நமது குடும்பத்தின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக