சனி, ஆகஸ்ட் 08, 2015

மாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்படும் மாடுகளை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மாட்டு வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். மாடுகளைத் திரும்ப ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், கோசாலை நிர்வாகிகள் மாடுகளை விடுவிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் பி.ராமசாமி, செயலர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது:- கடந்த 21 நாள்களாக நடைபெறும் இப்போராட்டம் காரணமாக ரூ. 200 கோடி மதிப்பிலான மாடுகள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளன. மாட்டு வியாபாரத்தை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதிலும் உள்ள மாட்டு வியாபாரிகள் தங்களது குடும்ப அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இச்சங்க நிர்வாகிகள் உள்பட 276 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக