சனி, ஆகஸ்ட் 08, 2015

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்துகிறது

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் மாநாடு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- 

14 மாதத்தில் 21 நாடுகளுக்கு சென்று, உலகம் சுற்றும் வாலிபன் என்று பட்டம் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி வராது வந்த மாமணி போல தமிழகத்தின் மீது தனது கடைக்கண் பார்வையை காட்டி இருக்கிறார். தமிழகம் வந்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வறுமையை ஒழிக்க 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது என்னால் சொல்ல முடியும். 

பதவி ஏற்று 14 மாதத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு ஏதேனும் ஒரு திட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் நிலைத்து இருக்க கூடிய, இரண்டு தலைமுறைகளுக்கு பயன்பட கூடிய திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறதா?. இல்லை. 

காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திய தூய்மை திட்டம், திறன் மேம்பாடு திட்டம், காப்பீட்டு திட்டம் போன்றவற்றிக்கு புதிய பெயர் சூட்டி பா.ஜ.க. அரசு இன்றைக்கு செயல்படுத்தி வருகிறது. 

ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இருந்த திட்டத்தின் பெயர் இந்தியில் மட்டும் இன்று இடம் பெறுகிறது. இதுவும் கூட ஒரு வகையில் இந்தி திணிப்பு தான். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில், பேசிய கராத்தே தியாகராஜன், ‘காந்தியவாதி சசிபெருமாள் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்றுவிட்டதால், அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.’ என்றார். 

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக