வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

என்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை! மத்திய அரசு தலையிட எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி நிர்வாகம் அலட்சியம் செய்து வருவதோடு, போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தும் ஏதேச்சதிகார போக்குடன் செயல்படுகிறது. என்.எல்.சி நிர்வாகத்தின் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நியாயமான ஊதிய உயர்வினை அளிக்கக் கோரி போராடிவரும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டுவரும் என்.எல்.சி நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து, தற்போது 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். என்.எல்.சி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பணி நீக்க ஆணையையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக