வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது: ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக கஜேந்திர சவுகானை தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ். தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு ஜனாதிபதியை சந்தித்து, இந்த பிரச்சனை பற்றி முறையிட்டுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி. 

ஜனாதிபதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி "பிரதமருக்கும் பா.ஜ.கவுக்கும் சால்ரா அடிப்பவர்கள் மட்டும் உயர் கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு தவறான செய்தி அளிக்கப்படுகிறது. 

முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுபவர்கள் அதற்கான தகுதியுடன் இருப்பது இல்லை. மேலும் கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்படுகிறது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக