திங்கள், ஆகஸ்ட் 03, 2015

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது. மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கலந்தாய்வை நடத்தினார். கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 968 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் ஆகியோர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுக்க உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மாதம் முழுவதும் கலந்தாய்வை நடத்தியது. ஒட்டு மொத்த கலந்தாய்வும் நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக 4 கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.

என்ஜினீயரிங் முதுநிலை படிப்பில் (எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்.) சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) அண்ணாபல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. ‘கேட்’ (கிராஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் என்ஜினீயரிங் ) தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளும், பின்னர் ‘கேட்’ தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சாதாரண மாணவ-மாணவிகளும் கலந்துகொள்கிறார்கள்.

4-ந்தேதி ‘டான்செட்’ தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். 7-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். முதல் ஆண்டு வகுப்புகள் 17-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்குகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக