கருப்பு சட்டம் UAPA வை திரும்ப பெற வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுகுழுவில் தீர்மானம்! கடந்த டிச 29, 30 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு நெல்லையில் கூடியது. இந்த பொது குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதுமுள்ள பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள், தேசிய செயலாளர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர் மு.முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் இந்த பொது குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பாப்புலர் ஃப்ரண்டின் ஒரு வருட செயல்பாடுகள் குறித்து மீளாய்வு மற்றும் விவாதங்கள் செய்யப்பட்டது. பொது குழு டிச.30 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் முடிவுற்றது. இந்த பொது குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் :- 1) மதவாத பாசிச சக்திகளுக்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சாரம் பல்வேறு மத, சாதி, இன மக்கள் வாழும் நமது தேசத்தில் மதவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தேசத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் நமது தேசத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு சவால் விடும் நிலையில் இந்த பாசிச பரிவாரங்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.
இந்த மதவாத சக்திகள் தேசிய அளவில் பா.ஜ.க என்ற முகத்தில் அரசியல் தளத்தில் செயல்பட்டுவருகிறது. வடஇந்தியாவில் பல்வேறு ரத யாத்திரைகளை நடத்தி மதமோதல்களை ஏற்படுத்தி கட்சி நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இதுவரை இந்த பா.ஜ.க வினை தென் இந்திய மக்கள் மற்றும் தென் மாநில அரசியல் கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவது வரவேற்கத்தக்கது.
மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த பா.ஜ.க பல்வேறு மாயையுடன் ஏதேனும் மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். திராவிட பூமியாம் தமிழகத்தில் இந்த பா.ஜ.க வை வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்த பா.ஜ.க வின் மாயையை தோலுரிக்கும் முகமாகவும், அதனது ஆபத்தினை மக்களுக்கு கொண்டு செல்லும் முகமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலம் தழுவிய பாசிச எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
2) பிப்ரவரி 17 - பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களை அனைத்து தளங்களிலும் சக்திபடுத்திடும் சீரிய பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. நம் தேசம் சுதந்திரமடைந்து 66 ஆண்டுகளாகியும் முஸ்லிம்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ராமநாதபுரத்தில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கொடி ஏற்றம், மக்கள் நலப்பணிகள், மற்றும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் பரவலாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3) கருப்பு சட்டம் UAPA வை திரும்ப பெற வேண்டும் சிறைச்சாலைகளில் வாடிகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணை கைதிகளே என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய விசாரணை கைதிகளில் அதிகமானோர், பிணை(Bail) கிடைக்கப்பெறாமலும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாமலும் தங்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியினை சிறையில் கழித்த பின்னர் விடுதலை செய்யப்படுவது வாடிக்கையாகிவருகிறது. ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே இத்தகைய அவலத்தில் அதிகம் சிக்க வைக்கப்பட்டு தவித்து கொண்டிகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் UAPA என்ற கருப்பு சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அப்பாவி இளைஞர்களை சட்ட விரோதமாக கைது செய்வதும், அவர்களை போலி வழக்குகளில் சிக்க வைத்து பிணை கிடைக்க விடாமல் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
முன்னதாக தடா மற்றும் பொடா போன்ற கருப்பு சட்டங்களால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினால் திரும்ப பெறபட்டது. எனினும் இந்த கருப்பு சட்டங்களின் ஷரத்துக்கள் 1967-ம் ஆண்டு இயற்றப்பட்ட UAPA சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் செய்யப்பட்ட பல்வேறு திருத்தங்கள் மூலம் மீண்டும் புகுத்தப்பட்டுள்ளன. இத்திருத்தங்கள் யாவும் விரிவான விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தேசிய அளவில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. தமிழகத்திலும் இந்த பிரச்சாரத்தை வெற்றி பெற செய்ய பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொடா மற்றும் தடாவை அனைத்து நீதி விரும்பும் மக்கள் மற்றும் அமைப்புக்கள் போராடி வாபஸ் பெற வைத்தது போல் இந்த UAPA சட்ட திருத்தத்தையும் திரும்ப பெற போராட பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது.
4) மாநிலத்தில் 7% மத்தியில் 10% இடஒதுக்கீடு முஸ்லிம்கள் மிக நீண்ட நாட்களாக இடஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறார்கள். அரசு நியமித்த பல்வேறு கமிஷன்கள் முஸ்லிம்களின் மோசமான நிலையை கண்டறிந்த போதும் அதனை சரிசெய்ய நமது அரசியல் சாசன சட்டம் வகுத்து தந்த இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் இன்று வரை இடஒதுக்கீட்டினை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு மத்தியில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடும் மாநிலத்தில் 7% சதவீதமாக இடஒதுக்கீட்டினை உயர்த்தி தர வேண்டும் என்று பாப்புலர் ஃ.ப்ரண்ட் மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுகொள்கிறது.
5) மேலப்பாளையத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் திருநெல்வேலி நகரின் மையப்பகுதியில் இருக்கும் மேலப்பாளையம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பீடி சுற்றும் தொழிலை தான் செய்து வருகிறார்கள். இந்த தொழிலினால் அந்த மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் குடிதண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள், சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும் மிகவும் பின்தங்கிய பகுதியாக மேலப்பாளையம் இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் மேலப்பாளையம் பகுதியினை ஏதோ பயங்கரவாதிகளின் நகரமாகவும், மேலப்பாளையம் முஸ்லிம்களை சந்தேகத்திற்குரியவர்களாக சித்தரிக்கும் செயல்களும் நடந்து வருகிறது. இந்நிலையை மாற்ற அரசு துரித முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலியின் பிற பகுதிகளுக்குச் சமமாக மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் தரமான நர்சரி பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தர வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்க வேண்டும். இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுகொள்கிறது.
6) ஸகியா ஜாஃப்ரி அவர்களின் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு குஜராத் இனப்படுகொலையில் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான ஆதாரங்கள், அமிகஸ் கூரே ராஜூ ராமசந்திரனின் கருத்து என பல ஆதாரங்கள் இருந்த போதும் நீதிமன்றம் அவரை விடுவித்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து உயா்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ள ஸகியா ஜாஃப்ரி அவர்களின் தொடர் போராட்டங்களுக்கு இப்பொதுக்குழு தனது ஆதரவினை தெரிவித்து கொள்கிறது. 7) முஸஃப்பர் நகரில் நிவாரண நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் முஸஃப்பர் நகர் கலவரம் நடைபெற்று 3 மாதங்கள் கழிந்த பின்பும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரை அகதிகள் முகாம்களில் அல்லல்பட்டு வருகின்றன. கடும் குளிரில் வாடி சுமார் 35 குழந்தைகள் மரணித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி வருகிறது. இருந்த போதும் இத்தகைய தன்னார்வ அமைப்புகளால் இம்மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற இயலாது. அரசின் அக்கறையற்ற போக்கினை கண்டிப்பதுடன் நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் மறுவாழ்விற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொது குழு கேட்டுகொள்கிறது.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய் இலங்கை காவற்படையினால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களாக இது மேன்மேலும் அதிகமாகியுள்ளது. நேற்றைய தினத்திலும் 22 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர மாவட்டங்களின் வாழ்வாதார பிரச்சனையில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது. இப்படிக்கு ஏ. காலித் முஹம்மது, மாநில பொது செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக