செவ்வாய், ஜனவரி 07, 2014

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கூடுதலாக 65 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு



புதுடெல்லி,
காவிரி தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007–ம் ஆண்டில் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.பாசன நிலம் குறித்த தவறான கணக்கீட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது–

கூடுதலாக 65 டி.எம்.சி.
 ‘‘தமிழகத்தில் 24 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களுக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென காவிரி நடுவர் மன்றம் கணக்கிட்டிருந்தது. ஆனால் அது தவறான கணக்கீடு ஆகும். தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் 29 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. அதனைக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளனர்.
எனவே, உண்மை நிலவரப்படி 29 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு கணக்கிட்டு, கூடுதலாக ஆண்டு தோறும் சுமார் 65 டிஎம்சி தண்ணீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல், கர்நாடகத்தில் மொத்தம் 6 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருப்பதாகவும் ஆனால் அதனை 18 லட்சம் ஏக்கராக அளவிட்டு இருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டை குறைக்க வேண்டும்.
2–வது பருவ பாசனத்துக்கும்
அடிப்படை விதிகளின்படி சமச்சீரான நதிநீர்ப்பங்கீடு குறித்த 11 அளவீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் காவிரியைத் தவிர வேறு பல நதிநீர்ப்படுகைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தின் பல லட்சக்கணக்கான மக்களுக்கு காவிரி நதி ஒன்றுதான் பாசனத்துக்கும் குடிநீருக்கும் வழிவகுக்கும் ஒரே நதியாகும்.பல நூற்றாண்டுகளாக தமிழகத்துக்கு உரிமை கொண்ட இந்த நதியை தண்ணீர் தட்டுப்பாட்டைக் காரணமாக வைத்து தமிழகத்தில் ஒரே ஒரு பருவப் பயிருக்கு மட்டுமே பாசனம் செய்யும் வகையில் தண்ணீர் திறந்து விட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மாற்றம் செய்து, தமிழகத்தில் 2–வது பருவப்பயிர் பாசனத்துக்கு உதவும் வகையிலும் தண்ணீரைத் திறந்து விட உத்தரவிடவேண்டும்’’.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த அறிக்கை மீதான விசாரணை வருகிற 15–ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக