புதுடெல்லி
சிறுசேமிப்பு திட்டங்களில் பொதுமக்களின் முதலீடுமிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள் வழங்கும் கடனிற்கான வட்டி
விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
ஒத்திவைப்பு
மத்திய அரசின் ரொக்க கையிருப்பு
அதிகரித்துள்ளதால் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக அதிக நிதியை திரட்ட
வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் சென்ற
வாரத்தில் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.15,000 கோடி நிதி திரட்டும்
திட்டத்தை மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டிற்கு ஒத்திவைத்தது.
நடப்பு நிதி ஆண்டில் சிறு சேமிப்பு
திட்டங்கள் வாயிலாக மத்திய அரசு திரட்டும் நிதியைக் காட்டிலும் வெளியேறும்
தொகை ரூ.7.63 கோடி அதிகமாக இருக்கும் என மத்திய அரசு ஏற்கனவே மதிப்பீடு
செய்து இருந்தது. ஆனால், இதற்கு மாறாக சென்ற நவம்பர் மாத இறுதி நிலவரப்படி
சிறுசேமிப்பு திட்டங்களிலிருந்து வெளியேறிய தொகையைக் காட்டிலும் முதலீடு
செய்யப்பட்ட தொகை ரூ.33,120 கோடி அதிகமாக உள்ளது. தேசிய சேமிப்பு
பத்திரங்கள், அஞ்சலக தொடர் வைப்பு திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளில்
பொதுமக்களின் முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.
சிறுசேமிப்பு திட்ட முதலீடுகளுக்கு வருமான
வரிச் சலுகை கிடைப்பதால் இந்த நிதி ஆண்டு முடிவடைவதற்குள் மேற்கண்ட
திட்டங்களில் மேலும் முதலீடு அதிகரிக்கும். மத்திய அரசு நிதி பற்றாக்குறையை
ஈடுகட்டுவதற்கு பொதுமக்களுக்கு கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி
திரட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கும், சிறுசேமிப்பு திட்ட முதலீட்டிற்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது.
கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில்
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு மிகவும் குறைந்ததையடுத்து மத்திய அரசு
கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக அதிக நிதி திரட்டியது. நடப்பு நிதி
ஆண்டில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு மிகவும் உயர்ந்துள்ளதால்
கடன்பத்திரங்கள் வாயிலாக மத்திய அரசு திரட்டும் நிதி இலக்கை காட்டிலும்
குறையும் என இ.ஒய். நிறுவனத்தின் தலைமை கொள்கை ஆலோசகர் டீ.கே.ஸ்ரீவஸ்தவா
தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பணப்புழக்கம் அதிகரித்து கடனிற்கான வட்டி
விகிதம் குறையும் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால்
நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் தொழில்துறை
உற்பத்தி ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.1 சதவீதம் சரிவடைந்தது.
டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு
6.16 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான
வட்டியை குறைக்க வேண்டும் என்பது தொழில்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
பணக்கொள்கை
ரிசர்வ் வங்கி இம்மாதம் 28–ந் தேதி நடப்பு
நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான பணக்கொள்கை ஆய்வு அறிக்கையை
வெளியிடுகிறது. அதில் முக்கிய கடனிற்கான வட்டி விகிதங்கள்
குறைக்கப்படவில்லை என்றாலும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு
அதிகரித்துள்ளதால் கடனிற்கான வட்டி விகிதம் குறையலாம் என சில நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக