வெள்ளி, ஜனவரி 17, 2014

பாராளுமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் ஆகிறார், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து


புதுடெல்லி,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.மீண்டும் பிரதமராக விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வந்தனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மத்திய மந்திரிகள் மிலிந்த் தியோரா, மனிஷ் திவாரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வற்புறுத்தினார்கள். இவர்கள் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள்.
மத்திய மந்திரி ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்பட சில மூத்த தலைவர்களும் ராகுல் காந்தியை முன்நிறுத்த ஆதரவு தெரிவித்தனர். ஆஸ்கார் பெர்னாண்டஸ் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்; ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்தான் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என்றும், பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அவர் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவதில் காங்கிரசில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
வெளியேறலாம்
வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் நேற்று டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில்; தலைமுறை மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டதாகவும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க விரும்பாதவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறலாம் என்று கூறினார். அவர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என தான் உறுதியாக நம்புவதாகவும், தேர்தலில் அவரது தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருதுவதாகவும் மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.
எதிர்ப்பு
ஆனால் திக்விஜய் சிங் உள்ளிட்ட மற்றும் சில மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கொள்கைகள், கோட்பாடுகளின் அடிப்படையில்தான் தேர்தலை சந்திக்க வேண்டுமே தவிர, தனி நபர்களை முன்நிறுத்த தேர்தலை எதிர்கொள்ளக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
ராகுல் காந்தியை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பதிலாக அவரை கட்சியின் செயல் தலைவர் அல்லது பிரசார குழு தலைவர் ஆக்கலாம் என்று மூத்த தலைவர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர்.
பிரசார குழு தலைவர்
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று மாலை கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றியும், இன்று நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவராக நியமிப்பது என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய சிலர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்று கூறி அந்த யோசனையை சோனியா காந்தி நிராகரித்து விட்டார்.
இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இன்று அறிவிப்பு
டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பிரசார குழு தலைவராக ராகுல் காந்தி முறைப்படி நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக