சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பகுதி இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையான தெற்காசிய தொழிலாளிகள் வசித்து வரும் இடமாகும். அங்கு கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு இந்தியத் தொழிலாளி மரணமடைய நேரிட்டது. இதனால் அந்தப் பகுதியில் வசித்துவந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அங்கு நடைபெற்றிராத அளவிற்கு பெரிய வன்முறையாக அது மாறியது. இதனைத் தொடர்ந்து 56 இந்தியர்களும், ஒரு வங்காளதேசத்தவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்த பொது விசாரணை ஒன்றை நடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக் குழுவின் செயலகம் கலவரம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் தங்களை அணுகுமாறு இன்று அறிக்கை விடுத்துள்ளது. பொது விசாரணை பிப்ரவரி 19 ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்த பின்னர் இந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது. கலவரத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட 57 பேரில் இதுவரை 20 பேர் இந்தக் குழுவினால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவும் இந்தக் கலவரத்தின் காரணம் குறித்து விசாரித்து வருகின்றது. டிசம்பர் 26 ஆம் தேதி தனது விசாரணையைத் துவக்கிய இந்தக் குழு காவல்துறை அதிகாரிகள், குடியிருப்புவாசிகள், கடைக்காரர்கள், விபத்திற்குக் காரணமான பேருந்தின் ஓட்டுனர் மற்றும் அந்தப் பேருந்தின் டைம் கீப்பர் போன்ற பல தரப்புகளை விசாரணை செய்துள்ளது.
விசாரணைக் குழு கமிட்டி தனது பொது விசாரணைக்குப்பிறகு தனக்கு அளிக்கப்படும் சாட்சியங்களைக் கொண்டு தனது நடவடிக்கைகளையும், கண்டுபிடிப்புகளையும் மற்றும் பரிந்துரைகளையும் அந்நாட்டு உள்துறை அமைச்சர்வசம் ஒப்படைக்கும் என்று இன்றைய அறிக்கை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக