வியாழன், அக்டோபர் 20, 2011

விடுதலையான 40 ஃபலஸ்தீனர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர்

காஸ்ஸா:கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் விடுவித்த ஃபலஸ்தீன் கைதிகளில் 40 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர். இஸ்ரேல் சிறைகளிலிருந்து விடுதலையான இவர்களை கெய்ரோவிற்கு கொண்டுவந்த பிறகு கத்தர், துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

15 பேர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸிலும், 11 பேர் துருக்கியின் அங்காராவிலும், ஒருவர் ஜோர்டானிலும் மீதமுள்ளவர்கள் கத்தருக்கும் அனுப்பப்பட்டனர். கடுமையான தண்டனை விதிக்கப்பட்டவர்களைத்தான் இஸ்ரேல் நாடு கடத்தியுள்ளது.
இஸ்ரேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்த ஃபலஸ்தீன் ஊடக பணியாளர் அஹ்லாம் அல் தமீமி நாடு கடத்தப்பட்டு ஜோர்டானிற்கு வந்தார். ஹமாஸின் பிடியிலிருந்த இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதிற்கு பதிலாக இஸ்ரேல் முதல் கட்டமாக 477 ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை விடுதலைச் செய்துள்ளது.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி 1027 சிறைக் கைதிகளை விடுதலைச் செய்யவேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலையானவர்களில் பெரும்பாலோர் காஸ்ஸாவிற்கு வந்தவுடன் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே சிறைக் கைதிகளை விடுதலைச் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையால் கவலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோணர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக குற்றங்களை நடத்தியவர்களை விடுதலைச் செய்தது அங்கீகரிக்க முடியாது எனவும் ஆனால் இஸ்ரேலின் இறையாண்மையை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக