2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான தொலைபேசி ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் சிபிஐ, தயாநிதி மாறன் பெயரை சிறப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாநிதி மாறனின் தந்தை, முரசொலி மாறனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சிவசங்கரன். பிரபல தொழிலதிபரான இவர், தனது ஏர்செல் அலைபேசி நிறுவனத்திற்காக ஸ்பெக்ட்ரம் உரிமைக்கான லைசன்ஸ் கேட்டபோதுதான் மாறன் சகோதரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏர்செல் அலைபேசி நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவன அதிபருக்கு விற்க சொல்லி சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் அலுவலகத்திற்கு வரவழைக்கபட்டு மிரட்டப்பட்டதாகவும், அப்போது தயாநிதி மாறனும் தொலைபேசியில் சிவசங்கரனை தொடர்பு கொண்டு நிர்பந்தித்ததாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தயாநிதி மாறனின் தொலைபேசி பதிவுகளை மீட்டு விசாரித்தால் சிவசங்கரனின் குற்றச்சாட்டு குறித்து உண்மை தெரியவரும் என்றும், அவ்வாறான பதிவுகள் உண்மையில் பதிவாகியிருந்தால் மாறன் சகோதரர்களுக்கும் சன் டிவிக்கு பெரும் சிக்கல்கள் வரலாம் என டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக