ஞாயிறு, ஜூலை 24, 2011

நோர்வே தாக்குதல்கள்- 92 பேர் பலி


சம்பவம் நடந்த உடொயா குட்டித் தீவு
சம்பவம் நடந்த உடொயா குட்டித் தீவு
நோர்வேயில் தொழிற்கட்சி முகாமுக்காக இளைஞர்கள் கூடியிருந்த குட்டித் தீவு ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடந்து கொண்டிருந்த வேளையில், பொலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
ஒஸ்லோவின் மையப் பகுதியில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் நோர்வே பொலிசார் சோதனையும் நடத்தியுள்ளனர்.

சந்தேக நபர் பின்னணி

இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை சமூகவலைத்தளங்களான டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும்தான் தென்படுகின்றன. அதுவும் இந்தத் தகவல்கள் ஒரு சில நாட்கள் முன்பே சேர்க்கப்பட்டவையாக அமைந்துள்ளன.
பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக பொலிசார் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி எழுதுகையில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வருணித்துள்ளார். பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்தவராகத் தெரிகிறார். பின்னர் இவர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருந்ததாகத் தெரிகிறது. காய்கறிகள் பயிர் செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் அதுவென்று தெரிவிக்கப்படுகிறது. 
 இந்த நிறுவனத்துக்காக வாங்குவதாக காட்டிக்கொண்டு இவர் பெருமளவில் உரங்களை வாங்கிக் குவித்துள்ளார். பின்னர் இவற்றைப் பயன்படுத்தி அவர் குண்டு தயாரித்துள்ளார் என்று நோர்வே ஊடகங்கள் ஊகம் தெரிவிக்கின்றன.

இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நோர்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.
கருத்து பரிமாறுவதற்கான இணையதளங்களில் இவர் வலிமையான தேசியவாதக் கருத்துகளைக் கூறிவந்துள்ளார் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார். ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர். 

bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக