சோமாலியாவில் நிலவும் கொடும் பட்டினியை குறித்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் வேளையில் 13 குழந்தைகள் பட்டினியால் மரணித்துள்ளனர்.சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியும்,பட்டினியும் நிலவுவது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும், ரெட்க்ராஸ் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களுடன் சென்றனர்.
தலைநகரான மொகாதிஷுவின் வடக்கு மாவட்டத்தில் ஹவதாக் முகாமில் குழந்தைகள் இறந்துள்ளதாகவும், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இங்கு தீவிரமாக தளர்ந்துபோய் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் உஸ்மான் இப்ராஹீம் ப்ரஸ் டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைவின் காரணமாக ஏற்படும் சுகவீனம், தீவிர வயிற்றுப்போக்கு, தட்டம்மை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரணித்துள்ளனர்.
கொடும் வறட்சி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட கிராமீய பகுதிகளிலிருந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவையும், தண்ணீரையும் தேடி மொகாதிஷுவிற்கு வந்துள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் ஒன்றாக தங்கியிருப்பதால் கடுமையானநோய்கள் பரவுவதாக ஐ.நா அகதிகள் ஏஜன்சி கூறுகிறது.
சோமாலியாவின் தலைநகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களது உயிரை பாதுகாக்க இங்கு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் ஐ.நா சோமாலியாவை பட்டினி பிரதேசமாக அறிவித்தது.
அல்ஷபாப் போராளிகளில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐ.நா நேற்று முன் தினம் உதவிகளை அளித்தது. சோமாலியாவுக்கு எட்டுகோடி டாலரின் உதவிகளை அளிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களுக்கு இடையே மிகவும் கடுமையான வறட்சியைசோமாலியா எதிர்கொள்கிறது.
தண்ணீரையும், உணவையும் தேடி அயல் நாடுகளான கென்யாவிற்கும், எத்தியோப்பியாவிற்கும் செல்லும் சோமாலியா நாட்டு மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு லட்சம் நபர்கள் மட்டுமே தங்க வசதியுள்ள கென்யாவின் தாதாப் அகதிகள் முகாம் 4 லட்சம் மக்களால் திணறுகிறது. வறுமை நிலவும் இன்னொரு நாடான எத்தியோப்பியாவிலிருந்தும் தாதாப் முகாமிற்கு மக்கள் வருகின்றனர். சோமாலியாவில் 22 லட்சம் மக்களை வறுமை கடுமையாக பாதித்துள்ளதாகவும், அதற்கு இரு மடங்கு அதிகமான மக்களை வறுமை ஓரளவுபாதித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட பார்டேர் நகரத்தில் நேற்று முன் தினம் லாரிகள் மூலமாக 24ஆயிரம் பேருக்கான ஒரு மாத உணவுப் பொருட்கள் விநியோகம் செய்துள்ளதாக ரெட்க்ராஸ் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக