கவுகாத்தி - புரி ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்த்து ரயில் கவிழக்காரணமானவர்களாகக் கருதப்படும் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து புரி நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ரங்கியா- காக்ராபூர் இடையே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் 3 அடி தூரம் பெயர்த்து எறியப்பட்டது.
இதனால் கவுகாத்தி-புரி விரைவு ரயிலின் என்ஜின் மற்றும் 6 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்தில் 70 பயணிகள் படுகாயம் அடைந்தனர். ரெயில் கவிழ்ப்புக்கு காரணமானவர்கள் கண்டுபிடிப்பது பற்றி காவல்துறையினரும் ராணுவத்தினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் ரெயில் கவிழ்ப்புக்கு காரணமான ஆதிவாசி மக்கள் ராணுவம் என்ற இயக்கத்தின் தலைவன் பகன்பரா என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாத இயக்க தலைவரான சில்வியா ஒரங் என்பவனை கைது செய்தனர். அவனிடம் ரெயில் கவிழ்ப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக