சனி, ஜூன் 27, 2015

விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆம்பூரில் பதட்டம் நீடிப்பு


வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ஜமில்அகமது பரிதாபமாக இறந்தார். கடந்த 15–ந்தேதி அவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் வழக்கு சம்பந்தமாக பேச அழைத்து சென்று தாக்கியதாகவும் இதனால் தான் ஜமில் அகமது இறந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டிய இந்திய தவுகித் ஜமாத் அமைப்பினர் ஜமில்அகமதுவை அடித்து துன்புறத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு வேலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

மேலும் அவர்கள் நேற்று இரவு ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

போராட்டத்தில் எராளமானோர் பங்கேற்க திரண்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. போராட்டம் நடத்தியவர்களிடம் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எனினும் ஜமில்அகமது சாவுக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீஸ் நிலையம் முன்பு ஜமில் அகமதுவின் உடலை வைத்து போராட்டம் நடத்துவோம் என்று தவுகித்ஜமாத் அமைப்பினர் கூறியுள்ளதால் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது.
தற்போது ஜமில் அகமதுவின் உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் தான் அவரது உடல் ஆம்பூருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக