இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி வி.கே. சிங்குக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. வி.கே. சிங்கின் வயது சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. இது முடிவுக்கு வந்ததும் ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகவும் தரம் குறைந்த வாகனம் சப்ளை செய்ய தன்னிடம் ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசப்பட்டதாகவும் பரபரப்ப குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ படை பிரிவுகள் டெல்லியை நோக்கி முன்னேறி வந்ததாககவும், இது ராணுவ புரட்சி போன்று மத்திய அரசை மிரட்ட நடந்தது என்றும் ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மன்மோகன் சிங் இதை அவசரமாக மறுத்தார். ராணுவ படைகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக கூறுவது தவறான தகவல் அதுபோல் எதுவும் நடக்க வில்லை என்றார்.
ராணுவ தளபதி வி.கே. சிங்கும், டெல்லியை நோக்கி ராணுவ நடமாட்டம் என்ற தகவல் முட்டாள் தனமான வதந்தி என்று கூறியிருந்தார். இதற்கிடையே மூத்த மத்திய மந்திரி ஒருவரே இந்த புரளியை கிளப்பியதாக கூறப்பட்டது.
இந்த சர்ச்சை இன்னும் முடிவடையவில்லை. இது பற்றி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி ராணுவ தளபதி வி.கே. சிங் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஜனவரி மாதம் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 படைப்பிரிவுகள் முன்னேறி வந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. அன்று பயிற்சிகளை முடித்து விட்டுதான் 2 படைப்பிரிவுகளும் டெல்லி நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தன. இது வழக்கமாக நடைபெறும் பயிற்சி. அதை ராணுவ நட மாட்டம் என்று கூறுவது நகைப்புக்குரியது.
இதுபோன்று வழக்கமான பயிற்சிக்கு செல்வது, திரும்புவது பற்றியெல்லாம் அரசுக்கு தெரிவிக்க வேண்டியது இல்லை. அந்த வகையில்தான் ஜனவரி மாதம் படைகள் பயிற்சியை முடித்து திரும்பிக் கொண்டு இருந்தன. இதில் பல்வேறு வதந்திகள் உலா வருகிறது.
மத்திய மந்திரி ஒருவர்தான் இந்த தகவலை பரப்பியதாகவும் சில பத்திரிகைகளில் கட்டுரை வெளியானது. உண்மை கடவுளுக்குத்தான் தெரியும். நான் இந்த விஷயத்தைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2 படைப்பிரிவுகளும் டெல்லி நோக்கி வந்த ஜனவரி மாதத்தில் தான் எனது வயது சர்ச்சை வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அதை வைத்து இரண்டுக்கும் முடிச் சுப்போட வேண்டாம்.
இவ்வாறு வி.கே. சிங் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக