செவ்வாய், ஏப்ரல் 10, 2012

பா.ஜனதா எம்.எல்.ஏ. கொலை: பீகார் ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை

 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பீகார்  ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பீகார் மாநிலம் பூர்ணி யாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேசரி. பூர்ணியா தொகுதியில் 4 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவர் கடந்த  2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்தபோது  ரூபம்பதக் என்ற ஆசிரியை அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 இதுபற்றி சி.பி.ஐ. விசா ரணைக்கு முதல்- மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார்.
 விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ரூபம்பதக்  கணவர் இம்பாலில்  பணிபுரிந்து வந்தார். இதனால் அவர் 2 குழந்தைகளுடன் பூர்ணியா நகரில் தனியாக வசித்து வந்தார். அங்கு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். இந்த  பள்ளியை உள்ளூர் எம்.எல்.ஏ. என்ற முறையில் ராஜ் கிஷோர் கேசரி தொடங்கி வைத்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் 2007-ம் ஆண்டு எம்.எல்.ஏ. கேசரி மீது ரூபம்பதக் கற்பழிப்பு புகார் கொடுத்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதனால் ரூபம் பதக் பல்வேறு வகையில் நெருக்கடிக்கு ஆளானார்.
 கடைசியில் பூர்ணியாவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊரை காலி செய்து கணவர் வசிக்கும் இம்பால் நகருக்கு துரத்தப்பட்டார். தன்னை பல்வேறு வகையில் கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வை பழி வாங்க ரூபம்பதக்  திட்டமிட்டார்.
 கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பூர்ணியா திரும்பிய அவர் எம்.எல்.ஏ. கேசரியை சந்திக்க வீட்டுக்கு வந்தார். அப்போது கத்தியை மறைத்து வைத்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் எம்.எல்.ஏ. இருந்த போது திடீரென்று ரூபம் பதக் பாய்ந்து சென்று கத்தியால் எம்.எல்.ஏ.வை குத்தி கொலை செய்தார்.
 அப்போது எம்.எல்.ஏ. ஆதரவாளர்களால் ரூபம்பதக் தாக்கப்பட்டார். போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குணம் அடைந்ததும் ரூபம்பதக் கைது செய்யப்பட்டார்.
 பாட்னா சி.பி.ஐ. விசேஷ  கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரூபம்பதக்குக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக