நோர்வே: கடந்த வருடம் ஒஸ்லோவில் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மூலம் 92 நோர்வே பொதுமக்களைப் படுகொலை செய்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் "மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல" என செவ்வாய்க்கிழமை (10.04.2012) வெளியான புதிய மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ப்ரீவிக், திட்டமிட்டு நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 92 நோர்வே பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பீதியும்
அதிர்ச்சியும் பரவிய நிலையில், நோர்வே காவல்துறையினர் ப்ரீவிக்கைக் கைதுசெய்தனர்.
நீதிமன்ற விசாரணைகளின் போது அவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் லிப்பர்ஸ்டாட், "என்னுடைய கட்சிக்காரர் "paranoid schizophrenia" எனும் உளவியல் சிக்கலால் துன்புறும் ஒரு நோயாளி என்பதால், அவரை சிறையில் தள்ளுவதை விட ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்ப்பதே பொருத்தமானது" என வாதிட்டார். இத்தகைய கொடூரச் செயலைச் செய்வதற்கு நல்ல மனநிலையில் உள்ள ஒருவரால் ஒருபோதும் முடியாது என பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே, புதிய மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான ப்ரீவிக், ஸ்வீடிஷ் புதிய நாஜி இணையதள அமைப்பின் உறுப்பினர். பன்மைத்துவக் கலாசாரக் கலப்புக்கு எதிரானவர். இவர், பிறநாடுகளில் இருந்து வருவோர் நோர்வேயில் குடியுரிமை பெறுவதையும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் வேகமாகப் பரவுவதையும் மிகக் கடுமையாக எதிர்த்துவந்தார். பன்மைத்துவக் கலாசாரக் கலப்பினால் ஐரோப்பியக் கலாசாரத்தின் சுய அடையாளமும், தனித்துவமும், மரபுகளும் சிதைவடைந்து வருகின்றன என்று விமர்சித்த ப்ரீவிக், தான் பன்மைத்துவக் கலாசாரக் கலப்பை எதிர்க்கும் 'வியான்னா சிந்தனைப் பள்ளி' ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டார்.
தன்னை ஒரு வலதுசாரி எனவும், கிறிஸ்தவ அடிப்படைவாதி எனவும் அழைத்துக்கொள்ளும் ப்ரீவிக், இஸ்லாத்தை மிகத் தீவிரமாக வெறுப்பவர். ஒல்லாந்து நாட்டு அரசியல்வாதியும், தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளருமான கியர்ட் வில்டர்ஸ் என்பவரால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
85 பேரைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டும், மேலும் ஏழுபேரை வெடிகுண்டு வைத்தும் கொலைசெய்த ப்ரீவிக் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கருதப்பட்டதால், நோர்வேஜியன் சட்டப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கும் வகையில், 21 வருடகால சிறைத்தண்டனை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போதைய மருத்துவ அறிக்கை முன்னைய மருத்துவ ஆய்வை நிராகரித்து, ப்ரீவிக் ஓர் அப்பாவியோ மனநலம் பாதிக்கப்பட்டவரோ அல்ல எனத் தெரிவித்துள்ளமை, வழக்கில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் செய்த படுகொலைகள் குறித்து வருத்தம் தெரிவிக்க முற்றாக மறுத்துவிட்ட ப்ரீவிக், "ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஓர் உள்நாட்டு யுத்தம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது" என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக