ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது!


புதுடெல்லி:தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.2007-ஆம் ஆண்டு உ.பியில் லக்னோ, ஃபைஸாபாத், வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றத்தை வாபஸ் பெற அரசு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலித் முஜாஹித், தாரிக் காஸிமி, ஸஜ்ஜாதுர் ரஹ்மான் ஆகியோரை குற்றத்தில் இருந்து விடுவிக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு சட்ட வகுப்பின் கருத்தை ஆராய்ந்துள்ளது. இவர்களுக்கு எதிரான ஆதாரங்களின் விளக்கங்கள் குறித்து சிறப்பு அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) ஆகியவற்றிடம் மாநில உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் லக்னோ மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே சந்தேகத்தை தெரிவித்தது. இதுபோன்ற அனைத்து வழக்குகளின் ஆவணங்களையும் சட்ட துறையில் இருந்து அரசு கேட்டுள்ளதாக மாநில உள்துறை செயலாளர் ஆர்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
ஜவ்ன்பூர் மாவட்டத்தைச் சார்ந்த மதரஸா ஆசிரியரான காலித் முஜாஹிதும், ஆஸம்கரில் யூனானி மருத்துவரான தாரிக் காஸிமியும் ஹுஜி தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் கைது செய்தது. ஆனால், இவர்களின் மொபைல் ஃபோன்களை கைதை பதிவுச் செய்வதற்கு நான்கு தினங்கள் முன்பாகவே பறிமுதல் செய்து சீல் வைத்ததாக போலீஸ் ஆவணம் கூறுகிறது. கைது பதிவுச்செய்த பிறகும் மொபைல் ஃபோன் உபயோகிக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இந்த முரண்பாடு போலீசாரை சிக்கலில் மாட்ட வைத்துள்ளது.
தேவ்பந்த் தாருல் உலூம் ஆசிரியர் ஸஜ்ஜாதுர் ரஹ்மானை லக்னோ குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறி விடுவித்தது. ஆனால், ஃபைஸாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை நடப்பதால் ஸஜ்ஜாத் தற்பொழுதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்று ஸஜ்ஜாத் தேவ் பந்த் தாருல் உலூமில் இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த ஆவணங்களுடன் ஸஜ்ஜாதின் தந்தை நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கு அவசர கோலத்தில் ஜோடிக்கப்பட்டது என்று ஸஜ்ஜாத் ரஹ்மான் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் முஹம்மது சுஐப் கூறுகிறார்.
வாராணாசி குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் அஃப்தாப் ஆலம் அன்ஸாரி என்ற அப்பாவி நபரை கொல்கத்தாவில் இருந்து கைது செய்தது. பின்னர் அவர் நிரபராதி என்பது உறுதியான பிறகு 22 தினங்களுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்காக போலீஸ் மன்னிப்பு கேட்டது.
குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக